தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயு பகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின.
அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால்“ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.
பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்” எனப்பெறுகின்றது.
வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்: சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும் போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதி தேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.