10 சதவீத இடஒதுக்கீடு: தமிழகத்தில் அமலுக்கு வருமா?

திங்கள், 8 ஜூலை 2019 (10:16 IST)
பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி ரீதியிலான இடஒதுக்கீடு பல ஆண்டுகளாக அரசியல் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டுற்குள் வராத பொதுபிரிவினரில், நலிந்த பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

இதனை தற்போது நடைபெறவுள்ள எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வில் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் இதற்கான திட்ட அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பிவைத்துள்ளது.

இது தொடர்பாக சட்டப் பேரவையில், சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில், அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுகொண்டது.  இந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தவுள்ளார்.

மத்திய அரசின், நலிந்த பொதுபிரிவினருக்கான 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுகொள்ளும் மாநிலங்களில், 25 சதவீதம் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரித்து கொள்ளலாம் என மருத்துவக் கவுன்சில் தெரிவித்த நிலையில், இந்த திட்டத்திற்கு கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு, திமுக பலத்த எதிர்ப்பு தெரிவித்தது எனவும், தமிழகத்தில் உள்ள 69 சதவீத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை இது பாதிக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்