பேரறிவாளனுக்கு விடுதலை - அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

Webdunia
புதன், 18 மே 2022 (12:07 IST)
பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தன.
 
இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை  செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் இருந்து வந்தது.
 
இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என உச்சநீதிமன்றம் கருதியது. இந்நிலையில் இன்று பேரறிவாளன் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டம் 161வது பிரிவில் ஆளுனர் முடிவெடுக்க தாமதப்படுத்தினால் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
 
இந்த உத்தரவை அடுத்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பேரறிவாளன் விடுதலை குறித்து பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். 
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: 
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எந்த தவறும் செய்யாமல் இந்த இளைஞருடைய இளமைக்கால வாழ்க்கையை சீர்குலைக்கப்பட்டுவிட்டது. மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது மகிழ்ச்சி. 
 
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை:
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:
ஒரு தாயின் அறப்போர் வென்றது, அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள். 
பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்