ஹெச். ராஜாவை கைது செய்து பழி தீர்க்கும் எடப்பாடி? : இதுதான் காரணமா?
திங்கள், 17 செப்டம்பர் 2018 (14:29 IST)
குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்திய மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹெச்.ராஜாவை கைது செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு போலீசார் தடை விதித்த போது காவல் துறை மற்றும் நீதித்துறை மீது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சேறை வாறி வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது, சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினரிடையே மோதலை தூண்டியது என மொத்தம் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்கிற நிலையில், மன்னார்குடியில் இருந்த ஹெச்.ராஜா கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் பலமாக எழுந்தது. ஆனால், தற்போது வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது கோபத்தில் இருக்கும் முதல்வர் பழனிச்சாமி தரப்பு, நீதிமன்றம் மற்றும் காவல்துறையாக கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்து, பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. எனவே, எந்த நேரத்திலும் ஹெச்.ராஜா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.