மொத்த சொத்தையும் விற்று ஆன்லைன் சூது! – விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (12:34 IST)
திருநெல்வேலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் மொத்த சொத்தையும் விற்று விளையாடி இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுனரின் ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மியால் மற்றுமொரு இளைஞர் பலியாகியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சிவன்ராஜ். சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் ஆர்வம் காட்டி வந்த அவர் சில ஆயிரங்களை அதில் இழந்துள்ளார்.

இழந்த பணத்தை மீட்க மீண்டும் மீண்டும் பணத்தை கட்டி விளையாடியவர் இறுதியாக சொத்துகளையும் விற்று விளையாடி பணத்தை இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சத்தை இழந்த சிவன்ராஜ் விரக்தியில் விஷம் அருந்தியுள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்