பணிக்கு செல்ல விடாமல் மிரட்டில் - இளம்பெண் ஓடும் பேருந்தில் குதித்து தற்கொலை!

வியாழன், 13 ஏப்ரல் 2023 (11:03 IST)
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் பிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி(31). இவருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மாவட்ட ஆட்சியர் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்ற போது மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோர் நாகலட்சுமியை  இப்பணியினை உனக்கு தர இயலாது எனக் கூறியும் ஒழுங்காக வேலையை விட்டு சென்று விடு என மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி இந்த விவகாரம் தொடர்பாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட மூவரும் வீட்டிற்கு சென்று நாகலட்சுமி மிரட்டியதாக சொல்லப்படுகிறது இதனால் அச்சம் அடைந்த நாகலட்சுமி தன்னுடைய கடைசி 2 பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக மையிட்டான்பட்டியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
 
அப்போது சிவரகோட்டை அருகே உள்ள அனுமான் கோயில் அருகே பேருந்து வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய இரண்டு குழந்தைகளை அருகில் இருந்த அதை ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு திடீரென பேருந்தில் இருந்து குதித்துள்ளார்.திடீரென்று பெண் பேருந்தில் இருந்து குதித்ததை கண்ட சக பயணிகள் கூச்சலிடவே உடனடியாக பேருந்தை நிறுத்தி நாகலட்சுமியை சென்று பார்த்த போது பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும்,  சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி உயிர் இழந்தார்.இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 
 
விசாரணையில் இறந்த நாகலட்சுமியின் கைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடிதத்தில் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் பணி ஆணை வழங்கியதாகவும், அந்த வேலையை தனக்கு வழங்க மாட்டேன் என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் தவறாக பேசி தனது மனதை காயப்படுத்தியதாக எழுதப்பட்டு இருந்தது.மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலாளரும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுவதாகவும் இவர்களை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
பணிக்கு செல்ல விடாமல் மிரட்டியதால் இளம்பெண் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடந்த சம்பவம் ஏதும் அறியாமல்  நாகலட்சுமியின் கைக் குழந்தைகள் அழுதது பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. இதுதொடர்பாக மதுரை ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்