விளக்கு போட்டு காண்பித்த பிரதமருக்கு நன்றி! – திருமுருகன் காந்தி கலாய்!

திங்கள், 6 ஏப்ரல் 2020 (12:08 IST)
பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று நாடு முழுவதும் மக்கள் அனுசரித்த தீபம் ஏற்றும் நிகழ்வு குறித்து திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி ஏப்ரல் 5 (நேற்று) இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றும்படியும், டார்ச் லைட் அடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதை தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம், மெழுகுவர்த்தி ஏற்றினர். பல பிரபலங்களும் தாங்கள் தீபம் ஏற்றியதை இணையத்தில் பதிவிட்டனர். பல இடங்களில் சிலர் தீபங்களை ஏந்தி ஊர்வலமாக செல்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் அதிருப்திகளை தெரிவித்து வரும் நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி ”வேதமதம் என்று அழைக்கப்படும் இந்த நம்பிக்கை எவ்வளவு மூடத்தனமானது என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பித்த பிரதமருக்கு நன்றி” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்