தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமல்ஹாசனும் இந்த முறை சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மநீம மாவட்ட நிர்வாகிகளோடு கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதற்கு பிறகு பேசிய கமல்ஹாசன் தமிழக சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும், தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாக்கும் காலம் வந்துவிட்டதாகவும் பேசியிருந்தார். இதனால் கமலை முதல் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் சேர்ந்து அவர் கூட்டணி வைக்க இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கழகங்களுடன் கூட்டணி இல்லை என முற்றாக திராவிட கட்சிகளை தவிர்த்துள்ள கமல்ஹாசனின் முடிவை திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் வரவேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தவிர்த்து விசிக, தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகியவை மக்கள் நல கூட்டணி அமைத்தது போல, இந்த தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுமா என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.