ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று கூறிவிட்டு வருகிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் அதனையும் ஏற்காமல், பிறகு செல்லலாம் என்றும் கூறிவிட்டனர் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இரவு 09 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு மீது சராமாரியாக குற்றம் சாட்டினார். தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் தான் ராஜினாமா செய்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “எண்ணெய் கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டு இருந்த போது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கூட்டப்பட்டு இருப்பதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டது. நான் உடனே போயஸ் தோட்டம் சென்றேன்.
அங்கு மூத்த அமைச்சர்கள் கட்சி பொறுப்பும், ஆட்சிப் பொறுப்பும் ஒருவரிடத்தில் இருப்பது தான் நல்லது என்று கூறினார்கள். முதல்வர் பதவியை ராஜினா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இல்லையெனில் நீங்களே கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஆகிவிடும் என்றனர்.
அப்போது இந்த நடவடிக்கைக்கு என்ன அவசரம் என்று கேட்டேன். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் நினைவிடத்தில் சென்று கூறிவிட்டு வருகிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் அதனையும் ஏற்காமல், பிறகு செல்லலாம் என்று கூறிவிட்டனர்” என்று வருத்தத்தோடு தெரிவித்தனர்.