என்னதான் திட்டம் வைத்துள்ளார் கேப்டன் ?– குழப்பத்தில் தேமுதிக தொண்டர்கள்

புதன், 6 பிப்ரவரி 2019 (11:44 IST)
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தேமுதிக மட்டும் இன்னமும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பது அக்கட்சித் தொண்டர்களுக்கு குழப்பத்தை அளித்துள்ளது.
 

தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்துள்ளன. மறுபக்கம் அதிமுக, பாஜக மற்றும் பாமக இணைந்த ஒரு கூட்டணி உருவாவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்தக் கூட்டணியில் பாமக வையும் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது தமிழக அரசியலில் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும் கட்சி தேமுதிக மட்டுமே.

ஒருகாலத்தில் பிரதான எதிர்க்கட்சி, தமிழக வாக்காளர்களில் 10 சதவீதம் பேரைக் கைவசம் வைத்திருந்தது, கூட்டணிக்காக திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் காத்திருந்தது போன்றவை தேமுதிக கடந்த காலங்களில் செய்த சில அசைக்க முடியாத சாதனைகளாகும். ஆனால் அவை எல்லாமே இப்போது கடந்த காலமாக மாறிவிட்டன.

சமீபகாலமாக விஜயகாந்தின் உடல்நலக் குறைவு, 2016 சட்டமன்றத் தேர்தல் படுதோல்பி, கட்சி அதிகாரங்கள் அனைத்து விஜயகாந்திடம் இருந்து அவரது மனைவி மற்றும் மைத்துனரிடம் கைமாறியது தேமுதிக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் எந்தக் கட்சியும் அவர்களோடுக் கூட்டணி அமைக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை எப்படியாவது தேமுதிக வை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என ஆர்வம் காட்டிய ஸ்டாலின் கூட இம்முறை எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதற்கிடையில் அதிமுக வுடன் கூட்டணி பிரேமலதாவுக்க் எம்.பி. சீட் கேட்கப்பட்டது போன்ற விஷயங்களும் அடுத்தக்கட்டத்தை எட்டவில்லை.

அதனால் தேமுதிக இன்றைய அரசியல் சூழ்நிலையில் தனிமரமாக இருக்கிறது. கட்சியின் செயல்பாடுகள் என்னவென்று தெரியாமல் கட்சி தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்கு சென்றுள்ள கேப்டன் விஜயகாந்த் அடுத்த மாதம் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னாவது கட்சிப் பணிகள் துரிதமாக நடக்க வேண்டும் எனத் தொண்டர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்