நாகப்பட்டினம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் தேதி நடைபெற்றது.
அப்போது கோயிலில் உள்ள எட்டு கலசங்களுக்கும் தலா எட்டு கிராம் வீதம் தங்க முலாம் பூசப்பட்டது.
மொத்தம் 64 கிராம் தங்கம் பூசப்பட்டு இதற்கான அனைத்து செயல்களும் வீடியோவாக பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோபுர கலசங்கள் நிறம் மங்கிக் காணப்படுவதால் இது குறித்து உள்ளூர் மக்களில் சிலர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தனர்.
அதில் சுமாராக 800 முதல் 1000 கிராம் வரை தங்கம் பூசப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தனர்.
தற்போது நிறம் மங்கி இருக்கும் நிலையில் அப்படி பூசப்பட்ட 1000 கிராம் தங்கம் என்னவாயிற்று? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது பெரும் விவாதமாக உருவெடுத்த நிலையில் தற்போது கோயில் தரப்பில் இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
எட்டுக்குடி சுப்பிரமணியர் கோயில் செயல் அலுவலர் பி.எஸ்.கவியரசு இது குறித்து தெரிவித்துள்ளதாவது.....
கோயிலில் உள்ள எட்டு கலசத்துக்கும் உபயதாரர்கள் மூலம் பெறப்பட்ட 64.760 கிராம் தங்கம் கொண்டு முலாம் பூசப்பட்டது. இந்த பணி முழுவதும் கிராமத்தார்கள், முக்கிய பிரமுகர்கள், துறை அலுவலர்கள், நகை வல்லுநர் மற்றும் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 800 முதல் 1000 கிராம் தங்கம் வரையிலும் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அனைத்தும் உண்மைக்கு மாறானவை.
மேலும் லேக்கர் கோட்டிங் எனப்படும் மேல் பூச்சு பூசாததால் கலசத்தின் நிறம் மங்குகிறது.
இது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் கலசத்தின் ஒரு பகுதி சுத்தம் செய்யப்பட்டு கலசத்தில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், எட்டுக்குடி கோவிலுக்கும் அவப்பெயர் உண்டாக்கும் வகையில் வெளியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்பியவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.