தமிழக பள்ளிகளில் ப வடிவ இருக்கை அமைப்புகள் செய்யப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதாக வெளியான தகவல்களை பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது.
கேரளாவில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில், பள்ளிகளில் முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ற பாகுபாடு உள்ளதை சுட்டிக்காட்டி, பள்ளிகளில் ப வடிவில் இருக்கைகளை அமைத்து மாணவர்களை அமரச் செய்வதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அதை பின்பற்றி கேரளாவில் பல பள்ளிகளில் பெஞ்ச்சை ஒன்றன் பின் ஒன்றாக அமைக்காமல் ப வடிவில் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த பெஞ்ச் பாகுபாட்டை களையும் விதமாக ப வடிவ இருக்கைகள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
ஆனால் தமிழக பள்ளிகளில் பல வகுப்புகளில் அதிகமான மாணவர்கள் உள்ள நிலையில் ப வடிவில் இருக்கைகளை அமைக்கும்போது மாணவர்கள் அதிகமாக கழுத்தை திருப்பி பார்க்க வேண்டியிருக்கும் என்பதால் கழுத்து வலி, முதுகு வலி ஏற்படலாம் என்ற கருத்துகளும் எழுந்தது. இதனால் இந்த உத்தரவை உடனே பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் அதை பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது. ப வடிவ இருக்கை அமைப்பு முறை நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும், இந்த நடைமுறை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும், மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் இந்த இருக்கை முறை இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K