இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம்!-- திருமாவளவன் கண்டனம்

வியாழன், 2 நவம்பர் 2023 (19:01 IST)
நெல்லை அருகே மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள்  மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம் நடந்துள்ள நிலையில் இதை  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  
 
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.  
 
சாதிவெறி கொண்ட அந்தச் சமூகவிரோதக் கும்பல் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் அவ்விளைஞர்கள்  இருவரையும் நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். அதன்பின்னரே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து காவல்துறையினர் சாதிவெறிக் கும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர். 
 
அதேவேளையில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது''  என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்