பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அவகாசம் அளித்துள்ளது. அவ்வாறு பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதை தொலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ ஆசிரியர்கள் உறுதிப்படுத்தலாம்.