துருக்கியில் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் : ஜெயலலிதா

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (09:13 IST)
துருக்கியில், நேற்று முன் தினம், ராணுவ புரட்சிக்கான முயற்சியாக ராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால் துருக்கி அரசுக்கும்,  ராணுவ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் 265 பேர் பலியானதாக தகவல் வெளியானது.


 

 
இறுதியில் மக்கள் துணைக் கொண்டு, ராணவ ஆட்சி அமைக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்நிலையில், துருக்கி நாட்டிற்கு விளையாட சென்ற தமிழக மாணவர்களின் நிலை குறித்து இங்குள்ள பெற்றோர்கள் கவலை அடைந்தனர். 
 
ஆனால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் ,தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 148 மாணவர்கள் துருக்கி நாட்டிலுள்ள டிராப்சோன் என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். இதில் 11 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். துருக்கியில் திடீரென ஏற்பட்ட ராணுவப்புரட்சியின் காரணமாக அங்குள்ள மாணவர்கள் பாதுகாப்பு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என கேட்டறிந்து, அவர்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
அதன்படி, துருக்கியிலுள்ள தூதரக அதிகாரிகளை தமிழக அரசின் அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். டிராப்சோன் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் விளையாட்டு போட்டிகள் 18-ந்தேதி முடிவுறும் என்றும், அதன் பின்னர் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் எனவும் துருக்கியிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். எனவே, விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள மாணவர்களின் பெற்றோர் எவ்வித அச்சமோ கவலையோ அடைய வேண்டியதில்லை.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்