எடப்பாடி பழனிச்சாமியின் 3 ஆண்டுகள் கருத்துக்கு விஜயகாந்த் கண்டனம்

ஞாயிறு, 7 மே 2017 (23:00 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் மணல் அள்ளுவதை தடுக்க, 3 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்றும் மூன்று ஆண்டுகள் கழித்து தமிழக அரசே மணல் குவாரியில் இருந்து சப்ளை செய்யும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:



 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் மணல் அள்ளுவது தடை செய்யப்படும் என்றும், தமிழக அரசே மூன்று ஆண்டுகளுக்கு மணல் குவாரியில் இருந்து சப்ளை செய்யும் என்று அறிவித்திருப்பது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு மணல் அள்ளுவதை தடுக்கும்போது தான் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது காலம் தாழ்ந்த செயல் என்று தான் சொல்லவேண்டும். மணல் கொள்ளை அடிப்பதில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே முழுப் பங்கு உண்டு. மூன்று வருடம் கழித்து தான் மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று சொல்வதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், திமுக ஆட்சி காலத்திலும் மணல் கொள்ளை அபரிமிதமாக நடந்ததன் விளைவுதான் இன்றைக்கு தமிழகம் முழுவதும், குடிதண்ணீர் இல்லாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் சுமார் 400 பேருக்கு மேல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், அனைத்து ஊர்களிலும் பெண்கள் குடிதண்ணீர் இல்லாமல் சாலை மறியலில் நிற்கக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு எடப்பாடி பழனிசாமி மூன்று வருடம் மணல் அள்ளுவதை தடுத்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதி வெட்டவெளிச்சமாக உள்ளது. எனவே இந்த இரண்டு கட்சிகளையும் ஆட்சியில் இருந்து விரட்டுவது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தையே பாலைவனமாக மாற்றிவிட்ட பிறகு இப்போது மணலுக்கு பதிலாக சிமெண்டை உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்லுவது ஒட்டு மொத்த மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்