ஃபானிப் புயல் ஒடிசாவில் கரையைக் கடந்துள்ளது. சூறாவளிக்காற்றும் புயல்மழையும் அங்கு ஏகப்பட்ட சேதங்கள் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஒடிசா மாநில அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் அளவிலான உயிர்ச்சேதத்தை தடுத்துள்ளது. இப்போது புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சீரமைப்புப் பணிகளையும் வேகமாக மேற்கொண்டு வருகிறது.
அனைவரும் ஒடிசா அரசின் செயல்பாடுகளை பாராட்டி வரும் வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் டிவிட்டரில்,’ ஃபானி புயலை ஒடிசாவில் கையாண்ட விதம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிசா மாநில அரசுக்கு பாராட்டுக்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு இன்னும் கஜா புயலை இங்குள்ள ஆட்சியாளர்களின் மோசமான செயல்பாட்டால் இன்னும் நினைவில் வைத்துள்ளது.’ எனக் கூறினார்.
இதில் ஒடிசா மாநில அரசை மட்டும் பாராட்டி விட்டு மத்திய அரசைப் பற்றி எதுவும் சொல்லாததால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கமலை விமர்சனம் செய்துள்ளார். டிவிட்டரில் ‘கமல் ஒடிசா முதல்வரை மட்டும் பாராட்டுகிறார். புயலின் பாதையை சரியாகக் கனித்துக் கூறிய இஸ்ரோவையும் புயலுக்கு வருவதற்கு முன்பாகவே 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு பற்றி வாய்திறக்கவில்லை. டார்ச்லைட் இருந்தும் பார்வைக் கோளாறு’ எனக் கூறியுள்ளார்.