நேற்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நடிகர் சங்கம் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.வி.சேகரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தங்களது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென நடிகர் சங்க உறுப்பினரும் பாஜக கலை அணி செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
இதேபோல் நடிகர் சங்க உறுப்பினரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில், 'இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு) மறைந்த பல கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்த தெரியவில்லை. இது அறியாமையா? அகந்தையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.