மாணவர்கள் போராட்டம் எதிரொலி ; மீண்டும் அரசியலில் தமிழருவி மணியன்

செவ்வாய், 31 ஜனவரி 2017 (19:30 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம், தன்னை மீண்டும் அரசியலுக்கு இழுத்துள்ளதாக, காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.


 

 
பொதுவாழ்விலிருந்து விலகுவாக காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் கடந்த வருடம் மே மாதம் அறிவித்துள்ளார். இனி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்த அவர்,  “காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமற் போனால் நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என்று அறிவித்திருந்த படி இந்த முடிவை நான் மேற்கொண்டுள்ளேன்” என அப்போது கூறியிருந்தார். 
 
இந்நிலையில், ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் தன்னை மீண்டும் அரசியலுக்குள் இழுத்து வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு பிரபல வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
ஊழல் மயமாகிப்போன ஒரு சமுதாயத்தை ஒற்றை மனிதனாக இருந்து திருத்துவதற்கு எந்த வாய்ப்பும் இங்கே இல்லை. தவறான மனிதர்களை காட்டுவதிலேயே ஊடகங்கள் தங்கள் நேரங்களை செலவழிக்கின்றன. நேர்மையான மனிதர்களின் எளிமையையும், ஏழ்மையும் பொதுமக்கள் போற்றுவதில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியால் அரசியல் வாழ்வுக்கு விடை கொடுத்தேன். 
 
ஆனால், சமீபத்தில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய போராட்டம் எனக்கு வியப்பை தந்தது. முக்கியமாக, போராட்டத்தை அவர்கள் வெளிப்படுத்திய விதம் எனக்கு மிகப்பெரிய பாதிப்பை தந்தது. காந்திய வழியில் அவர்கள் அறவழியில் போராடி, அகிலத்தையே வியக்கச் செய்து விட்டார்கள். நான் மீண்டும் பொதுவாழ்வில் நடக்க இது எனக்கு ஊக்கம் தந்துள்ளது. இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். 
 
மேலும், இந்த இளைஞர்கள், இந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஒரு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழலையே உருவாக்கி வரலாறு படைத்துவிட்டார்கள். அப்படியென்றால், இவர்களால் இந்த தமிழத்தில் ஊழல் அற்ற ஒரு நிர்வாகத்தை ஏன் உருவாக்க முடியாது. மதுவற்ற மாநிலத்தை ஏன் இவர்களால் கொண்டு வர முடியாது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்