தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அக்னி நட்சத்திர காலமும் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிந்துள்ளது.
இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ராமச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் இயல்பான வெப்பம் நிலவும் என்றும், வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 8ஆம் தேதி வரை கோடை வெப்பச்சலனம் இருக்கும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
மே மாத இரண்டாவது வாரத்தில் மழை பொழிவு குறைந்து, மே 15ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி, மே 18 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இயல்புக்கு அதிகமாக இந்த ஆண்டு கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.