காசி தமிழ் சங்கமம் – எதிர்ப்புகளுக்கு மத்தியில் துவங்கிய பயணம்!
வெள்ளி, 18 நவம்பர் 2022 (08:24 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் 216 பேரை ஏற்றிச் செல்லும் காசி - தமிழ் சங்கமம் செல்லும் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ரயிலில் ராமேஸ்வரம், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து பிரதிநிதிகள் ரயிலில் ஏறினர். முதல் குழுவில் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பயணித்தனர். அவர்கள் நாட்டின் மிக முக்கியமான மற்றும் புராதனமான தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழமையான தொடர்பைக் கொண்டாடவும், மீண்டும் உறுதிப்படுத்தவும் சென்றுள்ளனர்.
நிறுவன செயலாளராகப் பணிபுரியும் சுபிக்ஷா, தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையேயான தொடர்பை மீண்டும் ஏற்படுத்துவதே இந்தத் திட்டம் என்று கூறினார். வாரணாசியின் கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பிய சுபிக்ஷா, "தென்காசி என்று அழைக்கப்படும் வாரணாசியின் கோவிலின் பிரதி எங்களிடம் உள்ளது" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதனிடையே ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ் மக்களின் இதயங்களில் காசி வாழ்கிறது. சங்க இலக்கியங்களில் கூட காசி பற்றிய குறிப்பு உள்ளது. காசிக்கும் தமிழ் மக்களுக்கும் ஆழமான தொடர்பு உண்டு என்றார். தமிழக மக்கள் காசியில் இருப்பதை உணர பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சி இது என்றும் ஆர்.என்.ரவி கூறினார்.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், தயாரிப்புகள், புத்தகங்கள், ஆவணப்படங்கள், உணவு வகைகள், கலை வடிவங்கள் மற்றும் வரலாறு ஆகியவை காசியில் ஒரு மாதக் கண்காட்சியும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிதமிழ்சங்கமத்தில் இந்தியாவின் இரு நகரங்களின் பாரம்பரியம் கலாச்சாரம், ஆன்மீகம், இலக்கியம், தத்துவம், இசை, நடனம், நாடகம், யோகா ஆகியவற்றின் சங்கமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.