தமிழகத்தில் பிராட்பேண்ட் இணைப்பு அமைக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், போடி தொகுதி பாஜக வேட்பாளர் வீ.வெங்கடேஷ்வரனை ஆதரித்து போடி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து இலவசங்களை மட்டுமே கொடுத்தது. ஆனால், இளைஞர்களுக்கு வேலை தரவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவோம்.
தமிழகத்தில் 20 கிலோ இலவச அரிசியை அம்மா கொடுப்பதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். அதை அம்மா அரிசி என்கின்றனர். நான் சொல்கிறேன். தமிழக அரசு வழங்குவது அம்மா அரிசி அல்ல, இது நரேந்திர மோடி அரிசி. காரணம், இந்த அரிசியை வழங்குவது மத்திய அரசு.
நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களில் பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகளை பொாது மக்கள் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பிராட்பேண்ட் இணைப்புகள் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.