தூத்துகுடியில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் 13 அப்பாவி தமிழர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குனர் ரஞ்சித் உள்பட கலந்து கொண்ட அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். ஓயாதே! ஓயாதே! மக்கள் போராட்டம் ஓயாதே’, ’நீயா நானா பார்க்கின்றோம், தமிழக மண்ணை காக்கின்றோம்’ என்றும், ’போராட்டத்தில் எங்கள் உயிர் போனால் போனால் போகிறது, செத்து மடிந்து போனாலும், கோழையாக போக மாட்டோம், மோடி ஆட்டம் செல்லாது’ என்றும் அவர்கள் எழுப்பிய கோஷம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தூத்துகுடியில் 100வது நாள் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசை வலியுறுத்தினர்.