ஸ்டெர்லைட் போராட்டம் : தலைமறைவான செய்தி சேனல்கள் : பின்னணி என்ன?
செவ்வாய், 22 மே 2018 (17:04 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் நடத்திய போரட்டங்கள் மற்றும் போலீசாரின் துப்பாக்கி சூடுகள் போன்றவைகளை செய்தி சேனல்கள் ஒளிபரப்பாமல் திடீரென பின் வாங்கியுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் இன்று காலை சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடும் நடத்தினர். இதனால் தூத்துக்குடியே கலவர பூமியாக காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஒரு பெண், 3 வாலிபர்கள் உட்பட இதுவரை 10 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், பலபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் எனத் தெரிகிறது.
ஆனாலும், தொடர்ந்து முன்னேறி சென்ற மக்கள் பேரணி கலெக்டர் அலுவலகம் சென்று அங்குள்ள வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும், அலுவலகங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்குள்ள கண்ணாடிகள் உடைந்தது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செல்போன் மூலம் எடுக்கப்பட்டு, வாட்ஸ்-அப் , டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரவி வருகிறது. காலை முதல் இதுபற்றிய தொலைக்காட்சி சேனல்கள் மதியம் தூத்துக்குடி பற்றிய செய்தியை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன. அதேபோல், களத்திலிருந்து செய்திகளை கூறிக்கொண்டிருந்த செய்தியாளர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டனர். மேலும், பல தனியார் செய்தி சேனல்களில் ஸ்டெர்லைட் அல்லாத செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது.
ஸ்டெர்லைட் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என அரசு தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
அரசு கேபிளை வைத்துக் கொண்டு, டிவி சேனல்களை மிரட்டி, இந்த அரசு செய்யும் அடாவடியை ஒரே ஒரு சேனல் கூட எதிர்க்க முன்வராதது மிக மிக வருத்தமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் இது குறித்து பேசும், சேனல்களின் தலைமை நிர்வாகிகள், வெளிப்படையாக கருத்து தெரிவிக்க அஞ்சுகிறார்கள். இந்த சேனல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, இந்த அடாவடியை எதிர்த்தால் தூக்கிலா போட்டு விடுவார்கள் ? இவர்கள் கோழைகளாக இருக்கும் வரை, இந்த அடாவடி தொடரத்தான் செய்யும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை 3 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சூட்டில் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.