ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியின் சார்பில் மனுசூதனனும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்கட்சியான திமுக வின் சார்பில் மருதுகணேஷும், சுயேச்சையில் போட்டியிடும் டிடிவி தினகரனும், பி.ஜே.பி-யின் சார்பில் கரு.நாகராஜனும் மற்றும் இதர சுயேச்சை வேட்பாளர்களும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் உள்ள வாக்களர்களுக்கு அதிமுக தரப்பில் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. பணப்பட்டுவாடா புகாரையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவியது. இதற்கு பதிலளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எக்காரணத்தைக் கொண்டும் ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் ரத்தாகாது எனவும் திட்டமிட்டபடி ஆர்.கே நகரில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.