கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், சில மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் கஞ்சா செடி வளர்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று அதிகாலை கோவையில் உள்ள சில பகுதிகளில், கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு எடுத்துத் தங்கிய விடுதிகள் மற்றும் வீடுகளில் திடீரென சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 70க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்கள் கதவை திறந்ததும், அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று தீவிரமாக சோதனை மேற்கொண்டதாகவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மாணவர்களிடம் பெயர், சொந்த ஊர், படிக்கும் கல்லூரி உள்ளிட்ட தகவல்கள் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில், கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறைகளில் காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது, கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.