ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம்: பதற்றத்தில் சென்னை!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (15:02 IST)
மாணவி அனிதாவின் தற்கொலை மரணத்தை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


 
 
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் லயோலா கல்லூரியின் முன்பு மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
சென்னை நியூ கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் குதித்தனர். சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் கிண்டியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 
இப்படி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்க சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா சமாதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தவர் என்பதால் அவரது சமாதியில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக மாணவர்கள் தெரிவித்தனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்