தனது மகனின் தற்கொலையால் இனிமேல் குடிக்கப்போவதில்லை என மாணவர் தினேஷின் தந்தை உருக்கமான பேட்டியளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் நல்லசிவன் சமீபத்தில், ரயில்வே மாம்பலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தினேஷின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவரின் தந்தை மாடசாமி கதறி அழுதார்.அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் அளித்த உருக்கமான பேட்டியில் கூறியதாவது:
“எனது மகன் எவ்வளவு கெஞ்சியும் நான் குடிப்பழக்கத்தை விடவில்லை. அதனால், மருத்துவர் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட அவனை இழந்துவிட்டேன். அவன் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும். அவன் ஆசைப்பட்டபடி இனிமேல் நான் குடிக்க மாட்டேன். அப்போதுதான் அவன் ஆத்மா சாந்தி அடையும். என்னை பார்த்து மது அருந்துபவர்கள் திருந்த வேண்டும். குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு முன் வர வேண்டும்” என தெரிவித்தார்.