ஜெயலலிதாவை ஸ்டாலின் போய் சந்திப்பாரா?: என்ன சொன்னார் அவர்?
புதன், 5 அக்டோபர் 2016 (16:34 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றானர்.
அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று வரும் அனைவரும் முதல்வரை பார்த்ததாக சொல்லவில்லை. மாறாக அவர் நலமுடன் இருப்பதாக கூறினார்கள் என்று தான் சொல்கிறார்கள். இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வரை பார்க்க போவதில்லை என கூறியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய பாஜகவின் முடிவு கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து நாளை திமுக போராட்டம் நடத்த உள்ளது.
மேலும், முதல்வரை இது வரை அங்கு போன யாரும் சந்தித்ததாக தெரியவில்லை. ஆகவே அவரை போய் சந்திப்பதில் பயனில்லை. ஆனால் ஏற்கனவே திமுக தலைவர் கூறியது போல் தமிழக முதல்வர் உடல்நிலை பற்றிய வதந்திகள் ஏராளமாக பரவுகிறது.
அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே நானும் முன் வைக்கிறேன். தமிழக அரசு சார்பில் முதல்வர் உடல்நிலை குறித்து விளக்கம் கூற வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.