ஏற்கனவே இந்தியாவில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், தற்போது ஹைப்பர் லூப் ரயில் சேவை விரைவில் அறிமுகமாக உள்ளதாகவும், இதன் சோதனை ஓட்டம் சென்னையில் நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. புல்லட் ரயில் வேகம் 450 கிலோமீட்டர் என்ற நிலையை ஒப்பிடும்போது, ஹைப்பர் லூப் ரயிலின் வேகம் 1100 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியாவின் போக்குவரத்து அமைப்பு முற்றிலும் மாற்றம் அடையும் என்று கருதப்படுகிறது. சென்னை ஐஐடி வளாகத்திற்குள் அதன் மாணவர்கள் உருவாக்கிய 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர் லூப் பாதையில், சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஹைப்பர் லூப் சேவை என்பது ஒரு வெற்றிட குழாய் மூலம் அதிவேகத்தில் ரயில் பயணம் செய்யும் முறையாகும். இது மிக வேகமானதுடன், அதே நேரத்தில் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும். இந்த ரயில் சேவை நடைமுறையில் வந்தால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் அரை மணி நேரத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.