சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.ஆர்.எம் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ள எட்டு கிரவுண்ட் நிலத்தை கடந்த ஆண்டு, கூலிப்படை உதவியுடன் போலி பட்டா தயாரித்து அபகரித்ததாக ரவியின் மீது போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் கோயம்பேடு போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ரவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அலுவலக ஊழியர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ரவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். எனவே ரவி பச்சமுத்து விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.