பள்ளிக்கு நிலம் வழங்கிய ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick

ஞாயிறு, 14 ஜனவரி 2024 (13:54 IST)
மதுரையில் பள்ளி கட்டிடம் அமைக்க தனது 1.5 ஏக்கர் நிலத்தை கொடையாக அளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



மதுரை கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்னும் பூரணம். வங்கியில் பணிபுரிந்து வரும் இவரது மகள் ஜனனி சில ஆண்டுகள் முன்பு 30 வயதில் உயிரிழந்தார். அவர் இறக்கும் முன்னர் தனது தாயாரிடம் தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தனக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் ஆயி அம்மாள்.

ஆயி அம்மாளின் இந்த செயல் பலரையும் வியக்க வைத்த நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆயி அம்மாளை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார்.

ALSO READ: வேட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி! – தமிழிலேயே வாழ்த்துகள் தெரிவித்தார்!

இந்நிலையில் ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள். ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்