பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் கூரியர் மூலம் எலி மருந்து அனுப்பி வைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு நேற்றோடு முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் போனால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் பேசினார். ஆனாலும், உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி, பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதோடு, ஒரு எலி மருந்து பாக்கெட் ஒன்றையும் இணைத்து அனுப்பினார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் “பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுள் ஒருவராக நான் வைக்கும் கோரிக்கை. தங்கள் கட்சி சார்பாக 37 எம்.பி-க்கள் இருந்தும் தமிழக விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. ராஜினாமா செய்யாமல், `தற்கொலை செய்வோம் என்று தங்கள் கட்சி எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37 பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்னையைத் தீர்க்கவும். உங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்து அனுப்புகிறேன் நன்றி. விவசாயம் வெல்லட்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்வோம் என அதிமுக எம்.பி.க்கள் நாடகாமடுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவே எலி மருந்தை எம்.பி.க்கு அனுப்பி வைத்தேன் என அவர் கூறியுள்ளார்.