கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளாராக செந்தில் பாலாஜியை அறிவித்ததையடுத்து அவரின் ஆதரவாளர்கள் வெடி வைத்து உற்சாக கொண்டாடினர்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக செயல்பட்டு வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீக்கி, முன்னாள் மாவட்ட செயலாளரும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜியை மீண்டும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரன் அறிவித்தார்.
இதனையொட்டி செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மட்டுமில்லாமல் அ.தி.மு.க வின் பலதரப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் பேரணியாக கரூர் பேருந்து நிலையம் வலம் வந்து, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
அப்போது கரூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவிற்கும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் என்றால் விட்டு விடுங்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்றால் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கடும் வாக்குவாததில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.