நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறிய நிலையில், சீமான் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, ஜனவரி 22ஆம் தேதி சீமான் வீடு முற்றுகை இடப்படும் என திருமுருகன் காந்தி தெரிவித்திருந்தார். அவருடன் பெரியார் ஆதரவாளர்களும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை சீமான் வீட்டை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, சீமான் ஆதாரம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்றும் பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சீமான் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, சீமான் இல்லம் முன்பு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அவரது வீட்டுக்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முற்றுகை போராட்டம் நடத்த வரும் பெரியார் ஆதரவாளர்களை கைது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சீமான் வீடு இருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.