ஏன்? ஏன்? ஏன்? மோடி அரசை கேள்விகளால் துளைத்த சீமான்!!

புதன், 15 ஏப்ரல் 2020 (15:58 IST)
கொரோனா குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்து கேள்விகளை எழுப்பியுள்ளார். அவை பின்வருமாறு.... 
 
1. கொரொனோ நோய்த்தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகளை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. மற்ற நாடுகளை பார்த்து அதன் வீரியத்தை உணர்ந்த தொடக்க காலக்கட்டத்திலேயே முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தகுந்த முன்னேற்பாடுகளையும் செய்ய மத்திய அரசு தவறவிட்டது ஏன்?
 
2. கையுறையும், முகக்கவசமும், பாதுகாப்பு உபகரணங்களுமில்லாது நோய்த்தொற்றால் மருத்துவர்களும், செவிலியர்களும் பாதிக்கப்படும் பேராபத்து இருந்தபோது  அதனை வழங்க ஏற்பாடு  செய்யாது அவர்களுக்காக கைதட்ட சொன்னதால் வந்த பயன் என்ன ?
 
3. நாடு முழுமைக்கும் கோடிக்கணக்கான அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது நிற்கையில் விளக்கில் நெருப்பேற்றச் சொன்ன  வெற்றுச்சடங்கால் விளைந்த நன்மை யாது ?
 
4. முறையான முன்னறிவிப்பில்லாது  அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும், உலகின் பல நாடுகளிலும் உண்ண உணவு , இருக்க இடமின்றி பாதுகாப்பில்லாது பயத்தோடு  சிக்கி  அகதியாய் தவிக்கும் மக்களை மீட்க எவ்வித செயல்திட்டங்களையும் இதுவரை அறிவிக்காதது ஏன்?
 
5. தினமும் வீட்டில் இராமாயணம், மகா பாரதம் எனத் புராணத் தொடர்களைப் பார்ப்பதைப் பெருமையோடு பதிவுசெய்கிற ஆட்சியாளர் பெருமக்கள், இந்த பேரிடர் காலத்தில்  தங்கள்  ஆட்சியின்கீழ் வீடற்ற ஏழை மக்கள் படும்பாடுகளை எப்போது பார்க்கப் போகிறார்கள்?
 
6. அந்நிய நாடுகளையே நம்பி தனியார்மய, தாராளமய, உலகமய  பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டையே சந்தைப்படுத்திவிட்டு மெல்ல மெல்ல வீழ்ந்துகொண்டிருந்த இந்திய பொருளாதாரம்   இப்போது ஒரே அடியாக அதலபாதாளத்திற்கு போனபிறகு   தற்சார்புபற்றிப் பேசும்   பிரதமர்  இதற்குமுன் ஒருமுறைகூட அதுகுறித்து சிந்திக்க தவறியது ஏன்?
 
7. 80 கோடி மக்களே அரசிடம் உதவியை எதிர்பார்த்து நிற்கையில் அவர்களிடமே போய் நிதிகேட்டு நிற்பது என்ன மாதிரியான நிர்வாகச் செயல்பாடு?
 
8. வணிகப் பெருநிறுவனங்களுக்கு 2014-15ல் ரூ65,607 கோடியில் தொடங்கி, 2018-19ல் ரூ 1,08,785 கோடிவரைத் தள்ளுபடி செய்துவிட்டு  தற்போது மத்தியப் பேரிடர் மேலாண்மை நிதிக்கணக்கில் வெறும் ரூ 3,800 கோடிகளை வைத்து கொண்டு மீதசெலவை மாநிலங்களிடம் தள்ளிவிடுவது ஏன்?
 
9. மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்குரல்கள் எழுந்தபோதெல்லாம் அதனைக் கண்டுகொள்ளாது காலில் போட்டு மிதித்துவிட்டு, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் மூலம் மாநிலங்களின் பெரும்பான்மையான நிதியாதாரங்களைப் பறித்துக்கொண்ட மத்திய பாஜக அரசு, தற்போது இந்தப் பேரிடர்காலச் சுகாதார முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகளை மட்டும் முழுக்க முழுக்க மாநில அரசின் மீது சுமத்திவிட்டு  தமது பொறுப்பிலிருந்து நழுவுவது ஏன் ?
 
10. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட  தொழில் முடக்கம், வேலையிழப்பு, பொருளாதார மந்தம் ஆகியவற்றால் கேள்விக்குறியான நாட்டு மக்களின் எதிர்காலம், தற்போது கொரொனா நோயத்தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்கத்தால் முற்றிலுமாக  இருளத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட  பொருளாதாரம்  சீர்குலைந்த ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை     மீட்டுருவாக்கம் செய்ய  அரசு முன்னெடுக்க தொடங்கியுள்ள திட்டங்கள் என்ன?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்