இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ”800” திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. ஈழப்படுகொலையின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான் “தம்பி விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானபோது தம்பிக்கு நான் சொல்ல தேவையில்லை, அவரே அப்படத்திலிருந்து புரிந்து கொண்டு வெளியேறிவிடுவார் என நம்பினேன். ஆனால் தற்போது அப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளதால் தம்பிக்கு இதை அன்போடு அறிவுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் ” விஜய் சேதுபதி உலக அரசியலும், நாட்டின் சூழலும் தெரியாதவரல்ல. இது வெறும் படமல்ல என்பதை உணர்ந்து, இதிலிருக்கும் அரசியலின் ஆபத்தைத் தெரிந்தே இப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்க்கிறோம். ராஜபக்சேவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும்போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.