மக்களுக்கு பச்சை துரோகம் செய்யும் அரசு! – பொங்கிய சீமான்!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (12:33 IST)
பெருமுதலாளிகளின் கடன்களை கணக்கிலிருந்து நீக்கி தொடர்ந்து மக்கள் விரோதமாக அரசு செயல்படுவதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு இந்திய பணக்காரர்கள், நிறுவன தலைவர்கள் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்து வருகின்றனர். கடன் வாங்கி திரும்ப செலுத்தாத முன்னணி தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தன்னார்வலர் ஒருவர் கோரியிருந்தார்.

அந்த தகவலின்படி விஜய் மல்லையா தனது விமான நிறுவனம் மீது பெற்ற ரூ.1,943 கோடி, வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மீது வாங்கப்பட்ட ரூ.5,492 கோடி கடன் உள்பட மொத்தம் 50 இந்திய செல்வந்தர்களின் வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் கணக்கியல்ரீதியான் கடனை நீக்குவது என்பது முழுவதுமாக கடனை நீக்குவது ஆகாது என்றும், கணக்கில் நீக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து கடன் தொகையை பெற சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கொரோனாவினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் அதை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை விட்டு விட்டு பெருமுதலாளிகளின் கடனை நீக்குவது மோசமான செயல். மத்திய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்ப் பாடுபடத்துடிப்பது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த இந்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் “ஆகவே, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிகாரக்குவிப்பிலும், எதேச்சதிக்காரப்போக்கிலும், முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டிலும் ஈடுபட்டு, பிழையான முடிவுகளாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டு மக்களை வாட்டி வதைத்துச் சுரண்டலில் ஈடுபடும் இக்கொடுங்கோன்மை அரசு வீழ்ந்தொழியும் நாள் வெகுதொலைவில் இல்லை என மத்திய அரசிற்கு இதன்வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்