நாட்டின் ஒற்றுமொத்த அழிவு சக்தி பாஜகதான் – ஹெச் ராஜாவுக்கு எஸ் டி பி ஐ பதில் !

Webdunia
திங்கள், 13 மே 2019 (09:46 IST)
அமமுக வை அழிவு சக்தி எனக் கூறிய ஹெச் ராஜாவுக்கு எஸ்டிபிஐ கட்சி பதில் அளித்துள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என அமமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இதற்கு எதிர் வினையாற்றிய ஹெச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் 1998 மற்றும் 2004 ல் அ இ அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்தது. ஆனால் செல்வி ஜெயலலிதா அவர்கள் திமுக வுடன் என்றாவது கைகோர்த்தாரா. இன்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிற்கு துரோகம் செய்கிறார் தினகரன். மேலும் SDPI யுடன் கூட்டணி வைத்து பயங்கரவாதத்தை வளர்க்கிறார். அமமுக ஒரு அழிவுசக்தி என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து SDPI கட்சி ஹெச் ராஜாவுக்கு விளக்கமளிக்கும் விதமாக பதிலளித்துள்ளது. ஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘வகுப்புவாத வன்முறைகள் மூலம் நாடு முழுவதும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவரும் பாஜக மற்றும் அதன் தமிழக துருப்பான பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் ஆதரவை கண்டு மிரண்டு போயுள்ளதாகவே தெரிகிறது.ஆளும் அரசுகளின் பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ள அமமுகவை கண்டு ஆளும் அரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து துறைகளையும் சீரழித்து, தொழில்துறையை முடக்கி, மக்களை வேலையில்லாமல் திண்டாட வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா, அமமுகவை அழிவு சக்தி என கூற என்ன அருகதை உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த அழிவு சக்தியாக பாஜகவும் அதன் சங்கப்பரிவார சக்திகளும் உள்ள நிலையில், வன்முறை பேச்சுக்கள் மூலம் மட்டுமே தன்னை அரசியலில் அடையாளப்படுத்திக் கொண்ட பாஜகவின் எச்.ராஜா அமமுக குறித்தும் எஸ்.டி.பி.ஐ. குறித்தும் பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள முபாரக், எஸ்.டி.பி.ஐ. கட்சியை பயங்கரவாத கட்சி என எச்.ராஜா குறிப்பிடுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை மக்கள் அறிவார்கள்.

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாடு முழுவதும் வகுப்புவாதத்தை தூண்டிவிட்டு நூற்றுக்கணக்கான கலவரத்தை நடத்தியது குறித்தும், மாலேகான் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தேர்தலில் சீட்டு வழங்கியது குறித்தும் ஆதாரத்துடன் பேச முடியும் என்று கூறியுள்ள அவர், இத்தகைய தீய அழிவு சக்திகள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், காவல்துறையின் அலட்சியப் போக்கே எச்.ராஜாவின் இதுபோன்ற தொடர் அவதூறுகளுக்கு முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எச்.ராஜா இனியும் எஸ்டிபிஐ கட்சி குறித்து அவதூறு செய்தால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்