பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு: திண்டுக்கல்லில் பரபரப்பு!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (16:39 IST)
திண்டுக்கல்லில் 12-ஆம் வகுப்பு மாணவி மீது அடையாளம் தெரியாத நபர் ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தமிழகத்தில் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகமாக நடந்தது. இதனையடுத்து ஆசிட் விற்பனையில் கட்டுப்பாடுகள் ஒழுங்குமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் ஆசிட் வீச்சு சம்பவங்கள் குறைந்து இருந்தது.
 
இந்நிலையில் திண்டுக்கலில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காயத்ரி என்னும் மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி இரவு காயத்ரியின் வீட்டில் மின்சாரம் தடைபட்டதால் காயத்ரியும் அவரது வீட்டில் உள்ளவர்களும் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையில் காயத்ரி திடீரென அலறினார்.
 
அப்போது அவரது பெற்றோர்கள் எழுந்து பார்த்தபோது தலைமுடி கருகி காயத்ரி வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதனால் உடனடியாக அவரது பெற்றோர்கள் அவரை அருகில் நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
காயத்ரிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் தான் காயத்ரி மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் யார் வீசியது என்பது தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த  நிலக்கோட்டை போலீசார் ஆசிட் வீசியது யார், எதற்காக வீசினார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்