தமிழக அரசியல் களம் தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக சற்று தாமதமாகவே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியலில் ஒரு அசாதரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக ஆளும் அதிமுகவின் நிலை பரபரப்பாகவே உள்ளது. ஓபிஎஸ் முதல்வராக, சசிகலா பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில் எப்பொழுது சசிகலா முதல்வர் நாற்காலியை பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பித்தில் இருந்தே நிலவி வருகிறது.
பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும் போதே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பகிரங்கமாக சசிகலா முதல்வராக வேண்டும் என பேட்டியளித்து வருகின்றனர். விரைவில் சசிகலா முதல்வர் ஆவார் என கூறப்பட்ட சமையத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தது.
இந்த நேரத்தில் சசிகலா முதல்வரகா பதவியேற்றால் மக்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு வெற்றியை அடுத்து சசிகலா விரைவில் முதல்வராக உள்ளதாக ஆளும் கட்சி வட்டார தகவல்கள் வருகின்றன.
அதன் ஒருகட்டமாகத்தான் ஜல்லிக்கட்டுக்கு சசிகலா தலைமை தாங்க இருப்பது. பன்னீர்செல்வம் கூட ஜல்லிக்கட்டுக்கு தலைமை தாங்குவதற்கு சசிகலாவை அழையுங்கள் என்று ஜல்லிக்கட்டு கமிட்டியினரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட சசிகலா முதல்வராக விரைவில் பதவியேற்பார் என்பதை உணர்த்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருகின்றனர்.
மேலும் சில உளவுத்துறை தகவல்களின் படி சில அமைச்சர்களின் பதவி பறிபோக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சசிகலா முதல்வரானதும் முதல் நடவடிக்கையாக அது இருக்கும் என கூறப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, சில அமைச்சர்கள் டாஸ்மாக் மற்றும் போக்குவரத்து துறைகளிடம் பழைய ரூபாய் நோட்டுகளை அள்ளிக்கொடுத்து அவர்கள் வழியே புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்ட தகவல் சசிகலாவுக்கு வந்துள்ளதாம்.
கோடிக்கணக்கில் அவர்கள் மாற்றியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் சசிகலா முதல்வர் ஆனதும் அவர்களின் பதவிக்கு ஆப்பு என கூறப்படுகிறது. தற்போது நடவடிக்கை எடுத்தால் முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என சசிகலா நினைப்பதாக தகவல்கள் வருகின்றன.