பொதுச்செயலாளர் பதவி தப்புமா? - தேர்தல் கமிஷனுக்கு பதில் மனு அனுப்பிய சசிகலா
வெள்ளி, 10 மார்ச் 2017 (13:04 IST)
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் கமிஷனுக்கு ஓ.பி.எஸ் தரப்பு அனுப்பிய புகாருக்கு, சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.,பி.எஸ் அணி தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது. அதையடுத்து, தேர்தல் கமிஷன் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறை முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, பதில் அளித்து, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சசிகலாவே பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்து, பெங்களூர் சிறைக்கு மீண்டும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு மார்ச் 10ம் தேதி (இன்று)க்குள் பதிலளிக்கும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, சசிகலாவின் வழக்கறிஞர்கள் பதில் மனு தயார் செய்து, சசிகலாவின் கையெழுத்தைப் பெற்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் சமர்பித்தனர்.
அதில், பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுத்ததால், தன்னை பொதுச்செயலரக நியமித்தது சரிதான் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது எனக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் எல்லாம், என்னை தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள் என்பதை தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலாவின் மனுவை தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. அரசியல் கட்சிகளின் பொதுவான விதிகளின் அடிப்படையிலும், அதிமுகவின் கட்சி விதி அடிப்படையிலும் இரு விதமாக அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.
அதிமுக கட்சி விதிகளின் படி பார்த்தால், வருகிற மார்ச் 31ம் தேதிதான், அதிமுக உறுப்பினராக சசிகலா 5 வருடத்தை பூர்த்தி செய்கிறார். ஆனால், அதற்கு முன்னரே அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அது செல்லாது என தேர்தல் கமிஷன் முடிவு செய்யலாம். அல்லது அரசியல் கட்சிகளின் பொதுவான விதிப்படி அவரின் பதவி செல்லுமா என்பது குறித்தும் அதிகாரிகள் பரிசீலிக்கலாம். இதில் தேர்தல் கமிஷன் என்ன முடிவெடுக்கும் என்பத் தெரியவில்லை.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், சசிகலாவின் பதவி குறித்து, தேர்தல் கமிஷனின் அறிவிப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பி.எஸ் அணி, தினகரன் தரப்பு என இரண்டுமே போட்டியிடும்.
சசிகலாவிற்கு எதிராக தேர்தல் கமிஷனின் தீர்ப்பு வெளியானால், அவர் நியமித்த அனைத்து நியமனங்களும் செல்லாததாகி விடும். அப்போது, ஓ.பி.எஸ் மதுசூதனன் போன்றவர்களின் அதிமுக பதவி அவர்களுக்கு தானாகவே வந்துவிடும். அதை வைத்து அவர்கள் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி செய்வார்கள.
எனவே, தேர்தல் கமிஷனின் முடிவை ஓ.பி.எஸ் அணி ஆர்வத்தோடும், சசிகலா தரப்பு கலக்கத்தோடும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.