தனி நாடு கேட்ட சரத்குமார் சமூக விரோதியா: பதில் சொல்லுங்க பன்னீர்!

சனி, 28 ஜனவரி 2017 (13:21 IST)
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த கலவரம் குறித்து விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறிய சில விளக்கங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மாணவர்கள் ஜல்லிக்கட்டு கோரிக்கையுடன் காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு போன்ற மற்ற பிரச்சனைகள் குறித்து பேசியது தவறு என்பது போல் குறிப்பிட்டார். இது பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லை பெரியாறு, காவிரி பிரச்சனைகள் குறித்து பேசுவது சமூக விரோத செயலா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
மேலும் முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது சில தீயசக்திகள், சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் கலந்து தனிநாடு வேண்டும் என கோஷம் எழுப்பினர். அதன் காரணமாகவே கூட்டத்தை கலைக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினார்.
 
ஆனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஜல்லிக்கட்டு நடத்தவிடவில்லை என்றால் தனி நாடு வேண்டும் என கோரிக்கையை வைக்கும் பேனர் ஒன்றுடன் போராட்டத்தில் ஈடுபடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
 
சில நாட்களுக்கு முன்னர் நக்கீரனில் வெளியான கட்டுரை படத்தில் கூட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கையில் பிடித்துள்ள பதாகையில் தனிநாடு கேட்ட வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு முதல்வர் பன்னீர்செல்வத்தின் பதில் என்ன? என பலரும் கேட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்