கபாலி பட டிக்கெட் கூடுதல் விற்பனை : அதிகாரிகளின் ஆய்வால் பரபரப்பு

வெள்ளி, 22 ஜூலை 2016 (13:32 IST)
சென்னையில் கபாலி படத்தின் டிக்கெட்டின் விலை , பல திரை அரங்குகளில் கூடுதல் விற்பனைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து விற்பனை வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படம் இன்று உலகம் முழுவதும் 5000 தியேட்டருக்கு மேல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க இருக்கும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
 
இந்நிலையில், சென்னையில் பல திரை அரங்குகளில், கபாலி படத்திற்கான டிக்கெட் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. டிக்கெட் கவுண்டர்களில் ரூ.300,500, 1500 என்றும் வெளியே ரூ. 2000 வரைக்கும் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
 
மேலும், ஒரு படம் U சான்றிதழ் பெற்றால், அரசு 30 சதவீதம் வரிவிலக்கு அளிக்கிறது. இதுபற்றிகருத்து கூறிய நீதிமன்றம் திரைப்படங்களுக்கு அரசு அளிக்கும் 30 சதவீத வரிவிலக்கின் பலன் திரைப்படம் பார்க்கும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், நடைமுறையில் அதை எந்த தயாரிப்பாளரும் பின்பற்றுவதில்லை. அந்த பணமும் தயாரிப்பாளர்களின் பக்கமே செல்கிறது. 
 
பல தியேட்டர்களில் டிக்கெட்டின் விலை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து விற்பனை வரித்துறை அதிகாரிகள் சென்னையில் அபிராமி, ஆல்பர்ட், தேவி, ஈகா, ஏஜிஎஸ் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் திடீர் சோதனை நடத்தினர்.
 
அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கி அவர்கள் சோதனை செய்தனர். அவர்களிடம் ‘எவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள்?’ என்ற விபரங்களையும் கேட்டறிந்தனர். 
 
அதிகாரிகளின் திடீர் சோதனை திரை அரங்குகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்