சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவும், தினகரன் அணியினர்களும் வாக்காளர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.6000 வரை பணம் கொடுத்து வருவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன்னர் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் செல்வியிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆனால் 'எங்களின் ஆதரவாளரிடம் ரூ.20 லட்சம் பிடிப்பட்டது என்பது பொய்' என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த நிலையில் 'நேற்று மட்டும் அதிமுக மற்றும் தினகரன் அணியால் ரூ.100 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் திட்டமிட்டு இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் கண்டும் காணாமல் இருப்பதாகவும் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்