மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடிக்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு..!
சனி, 30 டிசம்பர் 2023 (17:47 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறி இருப்பதாவது:
டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்குவது என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும் பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.
சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4% வட்டி, ரூ.1 லட்சம் வரை 6% வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இ
வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை ஆண்டுக்கு 6% சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் திருப்பம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு, தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் அவர்களுக்கு புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்திவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.
பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4,000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும் கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசதியாக ரூ.1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.
பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா ரூ.3000 வழங்கப்படும்.
வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்களின் பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம். அவர்களுக்குப் புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / கல்லூரி முதல்வர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பாடப் புத்தகங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும். இது பாதிப்புக்குள்ளான அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.
வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் / ஆவணங்கள் குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வரும் திங்கள் கிழமை தோறும் துவங்கப்படும்.
வாகன பழுது பார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.”