காவிரி பிரச்சனையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல் கட்சிகள் : ஆர்.ஜே. பாலாஜி கோபம்

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (19:48 IST)
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கார்நாடகத்தில் வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது.


 

 
தமிழர்கள் தாக்கப்படுவதோடு, அவர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அந்த உத்தரவையும் தாண்டி, தற்போது பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 தனியார் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
 
இந்நிலையில், இதுபற்றி ரேடியோ ஆர்.ஜே.வும், நடிகருமான பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது “ஒட்டுக்காக, காவிரி பிரச்சனையை தீர்க்காமல், அதை தூண்டிவிட்டு அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்ப்பதை இரு மாநிலங்களில் உள்ள மக்களும் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அங்கேயும் சரி.. இங்கேயும் சரி.. ஒரு குழுவை சேர்ந்த சிலர்தான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அது வெட்க கேடானது. அதற்காக மாநிலத்தில் உள்ள அனைவருக்கு எதிராக நாம் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறக்கூடாது. 
 
அப்படி செய்வதால், தமிழக விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அது கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். 
 
எனவே நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டி விடும் விதமான கருத்துகளை நாம் தெரிவிக்க வேண்டாம். 
 
இந்த காவிரி விவகாரம் மேல்மட்ட அதிகாரிகள் கலந்து பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை ஆகும். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்