கலவர பூமியான தூத்துக்குடி - ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி

செவ்வாய், 22 மே 2018 (11:20 IST)
ஸ்டெலைட் போராட்டத்தில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அது கலவரமாக மாறியுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.  
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.  
 
இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 100வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்ற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியே கலவர பூமியாக காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்