சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்து குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டதாக தெரிவித்தார். சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும் சட்டசபையில் மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் எடப்பாடி குற்றம் சாட்டினார்.
கள்ளசாராய மரணத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கள்ளச்சாராய மரணத்தை மறைக்க மாவட்ட ஆட்சியர் முயற்சித்ததாகவும், அவர் நேர்மையுடன் செயல்பட்டு இருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்றும் எடப்பாடி தெரிவித்தார்.
மேலும் கள்ளச்சாராய விற்பனைக்கு தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு பங்கு உண்டு என்றும் இரண்டு கவுன்சிலர்கள் உடந்தையாக இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கவில்லை என குறிப்பிட்ட எடப்பாடி, கட்சிக்காரர்களை காப்பாற்றுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வையுங்கள், முடிந்த உடன் மக்களுக்காக குரல் கொடுங்கள் என்றும் ஆளுங்கட்சிக்கு துணை போகாதீர்கள் என்றும் தெரிவித்தார்.