சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் மரணமடைந்தார். இவரது மரணம் தற்கொலை என சிறைத்துறை வட்டார தகவல்கள் கூறினாலும் இந்த மரணத்தில் பல மர்ம முடிச்சுகள் உள்ளன.
ராம்குமாரின் மரணத்திற்கு காரணம் என வரும் தகவல்கள் பல முன்னுக்குப்பின் முரணாகவே வருகின்றன. கடந்த 18-ஆம் தேதி மாலையில் ராம்குமார் மரணமடைந்த செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகின.
பின்னர் ராம்குமார் அறையில் இருந்த கரன்ட் பாக்சில் செல்லும் மின்சார கம்பியை வாயில் கடித்து மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்ற தகவல் வந்தது.
அடுத்ததாக ராம்குமார் சமையலறை பகுதியில் நடந்து போகும் போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இது மதிய உணவு இடைவேளையின் போதே நடந்ததாகவும் கூறப்பட்டது.
அதன் பின்னர் வந்த தகவலில், ராம்குமார் சிறையில் அவரது அறையிலேயே இறந்து கிடந்ததாகவும், அவர் மதிய உணவுக்கு வெளியே வரவில்லை எனவும் கூறப்பட்டது.
மின்சாரம் தாக்கியதால், ராம்குமாரின் முகம் கருகி விட்டது என்றும் வாயில் மின்சார வயரை வைத்துக் கடித்ததால் உதட்டில் பக்கத்தில் காயம், மார்பில் காயம், கை மற்றும் இடுப்பில் காயம் என்ற தகவல் வந்தது.
அடுத்ததாக ராம்குமாரின் வழக்கறிஞர் சிறை காவலரை தொடர்புகொண்டு கேட்டபோது ராம்குமாருக்கு வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் தற்கொலை எல்லாம் செய்யவில்லை என கூறப்பட்டது.
இப்படி ராம்குமார் மரணம் எப்படி நிகழ்ந்தது என பல முரண்டான முன்னுக்குப்பின் சம்மந்தமில்லாத தகவல்கள் வந்து இந்த மரணம் மர்ம மரணமாக மாறிவிட்டது. பொதுமக்கள் மத்தியில் இன்னமும் இந்த மரணம் குறித்த மர்மம் விலகவில்லை.